பாப்புலர் ஃப்ரெண்டுக்கும் எஸ்டிபிஐக்கும் உள்ள தொடர்பு குறித்து எந்த ஆதாரமும் இல்லை – தலைமை தேர்தல் ஆணையம்!

Share this News:

புதுடெல்லி (03 அக் 2022): தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்டிற்கும் (பிஎஃப்ஐ) சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவுக்கும் (எஸ்டிபிஐ) எந்த தொடர்பும் இல்லை என மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

PFI தொடர்பான அமைப்புகள் மற்றும் தலைவர்கள் மீதான நடவடிக்கையை மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரப்படுத்தி வரும் நிலையில் SDPI யையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் PFI மற்றும் SDPI இடையே எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இந்த தகவலை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேசிய செய்தி நிறுவனமான ‘இந்தியா டுடே’விடம் தெரிவித்தார். அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனினும், இரு அமைப்புகளுக்கும் இடையேயான உறவை தெளிவுபடுத்த எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று ராஜீவ் குமார் கூறினார்.

செப்டம்பர் 28ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் அதன் சார்பு அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. யுஏபிஏ சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, SDPI மீதும் நடவடிக்கை எடுக்க ஒரு பிரிவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

SDPI ஜூன் 21, 2009 அன்று உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 13, 2010 அன்று மத்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. மேலும் கர்நாடகா, தமிழ்நாடு, ராஜஸ்தான், பீகார், மத்தியப் பிரதேசம், வங்காளம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகள் மற்றும் மாநகராட்சிகளில் SDPI உறுப்பினர்கள் உள்ளனர்.


Share this News:

Leave a Reply