புதுடெல்லி (22 மார்ச் 2020): குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடைபெறும் பகுதியின் அருகில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி கேட்டுக் கொண்டபடி மக்கள் ஊரடங்கு நாடுமுழுவதும் இன்று காலை 7 மணி முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்கள் எவ்வித போக்குவரத்துமின்றி வெறிச்சோடி கிடக்கின்றன.
மக்கள் ஊரடங்கு அமலில் இருந்தாலும் சில கட்டுப்பாடுகளுடனும் ஒரு சில பெண்களுடனும் இடைவெளி விட்டு அமர்ந்து ஷஹீன் பாக் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடைபெறும் பகுதியின் அருகில் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனை பார்த்த போராட்டக் காரர்கள் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.. இதையடுத்து அங்கிருந்தோர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 341 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.