புதுடெல்லி (20 ஜன 2020): கடின உழைப்பே வெற்றிக்கான வழி என்று மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி, டெல்லி Talkatora மைதானத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் திரு. மோதி, மாணவர்கள், தேர்வை அச்சமின்றி எழுதவும், பதற்றமின்றி அணுகவும் அறிவுரை வழங்கினார்.
அவநம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய சூழல்களை அனைவருமே சந்திப்போம் என்றுக் கூறிய பிரதமர், அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு, 2001-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா, இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை உதாரணம் காட்டினார். அந்த போட்டியில் இந்தியா பெரும் பின்னடைவை சந்தித்த நேரம், வீரர்கள் டிராவிட்டும், லக்ஷ்மனனும் நேர்மறையான சிந்தனையுடன், நம்பிக்கையுடன் விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றியதை நினைவு கூர்ந்தார்.
இளைஞர்களின் கற்பனையால் நாடு வளமாகும் என்று தெரிவித்த பிரதமர், பிரச்சனைகளை ஆக்கப்பூர்வமான வகையில் எதிர்கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சந்திரயான் தோல்வி தனக்கு மிகுந்த வருத்தத்தை தந்ததாகவும், சில வேளைகளில் தோல்வியும் கூட மிகப்பெரும் படிப்பினையாக அமையும் என்றும் பிரதமர் திரு. மோதி தெரிவித்தார். கடின உழைப்பே வெற்றிக்கான வழி என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தை சேர்ந்த 66 மாணவர்கள் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வு, அரசு பள்ளிகளில் பிரத்யேக திரை அமைக்கப்பட்டு வீடியோ மூலம் நேரலை செய்யப்பட்டது.