புதுடெல்லி (24 மார்ச் 2020): கொரோனா வைரஸின் தாக்கத்தை மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. தயவு செய்து அவ்வப்போது வெளியிடப்படும் அறிவிப்புகளை முறையாகப் பின்பற்றி, நீங்கள் பாதுகாப்புடன் இருந்து உங்கள் குடும்பத்தினரை கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளுங்கள்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, சட்ட விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதை அனைத்து மாநில அரசுகளும் உறுதிசெய்ய வேண்டும் என்று அந்தப் பதிவில் பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 80 மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளும் செவ்வாய்க்கிழமை மாலை முதல் மூடப்படவுள்ளன. தலைநகா் தில்லி, மாா்ச் 23-ஆம் தேதி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை முடக்கப்பட்டுள்ளது.