நீ முஸ்லிம் என்று நினைத்து அடித்தோம் – கா(வி)வல்துறையின் மத துவேஷ பதில்!

Share this News:

போபால் (20 மே 2020): காவல்துறையில் ஊடுருவியுள்ள காவிகளை அடையாளம் காட்டியுள்ளது இன்னொரு சம்பவம்.

மத்திய பிரதேசத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட தீபக் பந்துலே என்ற வழக்கறிஞரிடம் மன்னிப்பு கேட்டுள்ள போலீசார், “உங்களை முஸ்லிம் என்று நினைத்து தாக்குதல் நடத்தினோம்” என்று மத துவேஷத்துடன் காரணம் கூறியுள்ளது.

இதுகுறித்து கூறிய தீபக் பந்துலே கூறியிருப்பதாவது:

“நான் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி மத்திய பிரதேசம் பிதுல் பகுதியில் மருந்துப் பொருட்கள் வாங்க மருந்து கடைக்கு சென்றேன். எனக்கு 15 வருடங்களாக நீரிழிவு, மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் உள்ளன. இதற்காகவே மருந்துகள் வாங்க சென்றேன். அப்போது நாடுதழுவிய ஊரடங்கு அமலில் இல்லை. எனினும் 144 தடை உத்தரவு இருந்தது.

அப்போது என்னை தடுத்து நிறுத்திய போலீசார் என்னை கண்மூடித்தனமாக தாக்கினர். நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதனை போலீசார் செவிசாய்க்கவில்லை. பல போலீசார் ஒன்று கூடி என்னை தாக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் நான் வழக்கறிஞர் என்ற உண்மையை சொன்னதும் சற்று அமைதியானார்கள். எனினும் என் காதுகளில் ரத்தம் வடிய தொடங்கியது.

உடனே எனது நண்பர்களை அழைத்தேன் அவர்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டேன்.

மார்ச் 24 ஆம் தேதி என் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது வழக்கு தொடர்ந்தேன். மேலும் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தேன் முதல்வருக்கும் கடிதம் எழுதினேன்.

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சிசிடிவி காட்சிகளை கேட்டு மனு அளித்திருந்தேன். ஆனால் எனது துரதிர்ஷ்டம், என்னை தாக்கிய சிசிடிவி காட்சிகள் கிடைக்கப்பெறவில்லை. ஒருவேளை அவை அழிக்கப்பட்டிருக்கலாம்.

பின்பு போலீசாருக்கு நெருக்கடி அதிகரிக்கவே நான் அளித்த புகாரை திரும்பப் பெற்ற வலியுறுத்தி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே போலீசார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மே 17 ஆம் தேதி என் வீட்டுக்கு வந்த போலீசார்,’இச்சம்பவம் தவறுதலாக நடைபெற்றுவிட்டது. உங்களை வேண்டுமென்று அடிக்கவில்லை. உங்களை பார்க்கும்போது முஸ்லிம் போல இருந்தீர்கள் அதனால் அடித்தோம். உங்கள் மீது வேறு எந்த பகையும் கிடையாது. எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் ” என்று நா கூசாமல் கூறினர். மேலும் புகாரை வாபஸ் பெறவும் வலியுறுத்தினர்.

எனினும் நான் வழக்கை வாபஸ் பெற மறுத்துவிட்டேன். நான் இந்துவோ, முஸ்லிமோ, என் முடிவில் மாற்றமில்லை”என்று தீபக் பந்துலே தெரிவித்துள்ளார்.


Share this News: