புதுடெல்லி (17 ஜன 2020): மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கடினமான கேள்விகள் கேட்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் வீடுகள்தோறும் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் 31 கேள்விகளை கேட்குமாறு மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
செல்லிடப்பேசி எண் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்புடைய தகவல்கள் பரிமாற்றத்துக்கு மட்டுமே கேட்கப்படவுள்ளன.
தொலைபேசி இணைப்பு, காா், இருசக்கர வாகனங்கள், மிதிவண்டி, செல்லிடப்பேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி அல்லது கணினி, இணைய வசதி, வீட்டு எண் உள்ளிட்ட விவரங்கள் ஒவ்வொரு வீட்டிலும் சேகரிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது, அதற்கான முன்னேற்பாடுகளில், பெற்றோரின் பிறந்த தேதி மற்றும் அவர்கள் பிறந்த இடம் போன்ற சில கடினமான கேள்விகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே சமயம், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, பொதுமக்கள் யாரும் எந்த ஆவணத்தையும் காண்பிக்க வேண்டியது இருக்காது, மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் ஊழியர்கள், பொதுமக்கள் சொல்லும் தகவல்களை பதிவு செய்து கொள்வார்கள் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கேரள அரசு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.