சென்னை (20 அக் 2020): தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை நகர், புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 9 செ.மீ., மழை பதிவானது. சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 7 செ.மீ., விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 6 செ.மீ., மழை பதிவானது.
மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.