புதுடெல்லி (23 ஏப் 2020): கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
‘கொரோனா’ சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றியுள்ளது.
அதன்படி, தாக்கியவர்கள் மீது ஜாமினில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு, 6 மாதம் முதல், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும் வகையில், அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
மேலும், வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவோரிடமிருந்து அபராதமாக இருமடங்கு தொகை வசூலிக்கவும் இந்த அவசர சட்டம் வகை செய்கிறது. பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, 1897-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொற்றுநோய் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்டம் ஒப்புதலுக்காக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் அவச சட்டத்திற்கு, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரை பாதுகாக்கும் அவசரச் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.