புதுடெல்லி (23 ஏப் 2020): மும்பையில் வரும் மே 15-ம் தேதிக்குள் 6 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மத்தியக் குழு எச்சரித்துள்ளது.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் மும்பை மற்றும் புனே நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமான நிலையை எட்டியிருப்பதாக அண்மையில் மத்திய அரசு எச்சரித்திருந்தது. நிலைமையை நேரில் ஆய்வு செய்து மாநில அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, தலா 5 பேர் அடங்கிய 2 குழுக்களையும் மத்திய அரசு அமைத்தது.
மும்பை மற்றும் புனே நகரங்களில் முகாமிட்டு ஆய்வு நடத்தி வரும் இக்குழுவினர், முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். தாராவியில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில், மும்பையில் கொரோனா வைரஸ் பரவல் உக்கிரமடைந்து வருவதாக மஹாராஷ்ட்ர அரசுக்கு மத்தியக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்மாத இறுதிக்குள் மும்பையில் கொரோனா வைரசால் 42 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுவார்கள் என்றும், மே 15-ம் தேதிக்குள் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க சுமார் 5 லட்சம் படுக்கை வசதிகள் தேவைப்படும் என்றும், குறைந்தது 14 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மத்தியக் குழு எச்சரித்துள்ளதாக மஹாராஷ்ட்ர மாநில சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.