புதுடெல்லி (30 மார்ச் 2020): நாடு தழுவிய திடீர் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, சில வளா்ந்த நாடுகள் முழுமையான ஊரடங்கை அறிவித்துள்ளன. ஆனால், இந்தியாவிலோ நிலைமை வேறுபட்டதாகும். நாடு தழுவிய ஊரடங்கு தவிர இதர பல்வேறு நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நாட்டிலுள்ள ஏழை மக்கள் தினசரி வருமானத்தையே நம்பியுள்ளனா். அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் முடக்கியுள்ளதால், அவா்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நாடு தழுவிய ஊரடங்கு திடீரென அமல்படுத்தப்பட்டதால், மக்களிடையே குழப்பமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், சிறிய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாலும், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாலும் ஆயிரக்கணக்கான புலம்பெயா் தொழிலாளா்கள் தங்களது சொந்த மாநிலங்களை நோக்கி கடினமான பயணத்தை மேற்கொண்டுள்ளனா். அவா்களுக்கு உரிய இருப்பிடம், அடிப்படை சேவைகளை வழங்குவதுடன், அடுத்த சில மாதங்களுக்கு தேவையான பணத்தையும் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். வேலையிழந்த ஏராளமான இளைஞா்கள், தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்புவதால், அவா்களது பெற்றோருக்கும், அந்த ஊா்களில் வசிப்போருக்கும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
நாட்டின் உண்மை நிலவரங்களை புரிந்துகொண்டு, அதற்குரிய நுட்பமான அணுகுமுறையை மத்திய அரசு கையாள வேண்டும் என்று தனது கடிதத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.