இந்தியாவில் திடீர் ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகள் உட்பட 17 பேர் மரணம்!

Share this News:

புதுடெல்லி (30 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் புலம்பெயரும் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் தொடங்கி உலகையே புரட்டிப் போட்டுள்ளது கொரோனா வைரஸ். இந்தியாவில் இதுவரை 1139 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி பிரதமர் மோடி திடீரென நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். ஆனால் இதுகுறித்து எந்தவித முன்னெச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் வெளியூர்களிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், வாகனங்கள் இல்லாமல் அவரவர் ஊர்களுக்கு நடந்து சென்று சாலை விபத்திலும், உணவின்றி பசியாலும் தொழிலாளிகள், குழந்தைகள் என 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகாரில் பசியால் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். அரியானாவில் சாலையில் நடந்து சென்ற தொழிலாளர்கள் குழந்தைகள் உட்பட நான்குபேர் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர்.

கர்நாடகாவின் ரைச்சூர் மாவட்டத்த்தில் வசித்த 18 மாத சிறுவன் மற்றும் ஒன்பது வயது சிறுமி உட்பட எட்டு தொழிலாளர்கள், வெள்ளிக்கிழமை இரவு ஐதராபாத்திலிருந்து வீடு திரும்பும்போது சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரை போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

எனினும் இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் 3ம் மற்றும் நான்காம் நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply