புதுடெல்லி (01 ஜன 2022): நரேந்திர மோடி அரசு அறிவித்துள்ள இலவச உணவு தானிய விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 81.35 கோடி பயனாளிகளுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி செலவாகும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னதாக தெரிவித்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. சுமார் 81.35 கோடி மக்கள் இத்திட்டத்தின் கீழ் உள்ளனர்.
இந்திய உணவுக் கழகத்தின் பொது மேலாளர்கள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மூன்று ரேஷன் கடைகளுக்கு கட்டாயமாகச் சென்று தினசரி அறிக்கைகளை சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், பயனாளிகளுக்கு உணவு தானியங்கள் வழங்குவது தொடர்பாக மாநிலங்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
முன்னதாக, மானிய விலையில் ஒரு கிலோ அரிசி, 3 ரூபாய், கோதுமை கிலோ ஒன்றுக்கு, 2 ரூபாய், தானியங்கள் 1 ரூபாய் என பயனாளிகளுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. இவை தற்போது இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.