புதுடெல்லி (25 ஜூன் 2020): நாடு முழுவதும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கொடுக்கும் மருந்துக்கு இந்திய ஒழுங்குமுறை மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் கோவிஃபோர்(Covifor) என்கிற பெயரில் இந்த மருந்து விற்பனைக்கு வருகின்றது. ஹைதராபாத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பாளரான ஹெட்டெரோ, கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான Remdesivir-ஐ சந்தைப்படுத்த ஒப்புதலைப் பெற்றுள்ளது. இரண்டு மூன்று வாரங்களில் ஒரு லட்சம் குப்பியை உற்பத்தி செய்வதற்கான இலக்கை ஹெட்டெரோ நிர்ணயித்துள்ளது.
நாட்டின் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டு மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு கோவிட் -19 மருந்தின் 20,000 குப்பிகளை இந்நிறுவனம் தற்போது அனுப்பியுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் மற்றும் குஜராத்திற்கும் இந்த மருந்துகள் அனுப்பப்பட உள்ளன.
மருந்தின் அடுத்த தொகுதி கொல்கத்தா, இந்தூர், போபால், லக்னோ, பாட்னா, புவனேஷ்வர், ராஞ்சி, விஜயவாடா, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கோவா ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்படும். இதை தவிர தெலுங்கானாவிலும் இந்த மருந்து கிடைக்கும்.
கொரோனா தொற்றால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான நோயாளிக்கு குறைந்தபட்சம் ஆறு குப்பிகளைத் தேவைப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 100 மில்லிகிராம் குப்பியின் விலை ரூ .5,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஹெட்டெரோ நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் சிப்லா, தனது மருந்தின் விலை 5,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என்று கூறியுள்ளது.
தற்போது இந்த மருந்தானது சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.