மும்பை (30 டிச 2021): மும்பையில் ஸ்டேட் வங்கிக் கொள்ளையின் போது ஊழியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மும்பை SBI-யின் தஹிசார் கிளையில் நேற்று மாலை 3.30 மணியளவில் இரண்டு பேர் வங்கியில் கொள்ளையடிக்க வந்தனர். அப்போது சந்தேஷ் கோமர்(25) என்ற ஊழியர் வங்கிக்கு வெளியே இருந்தார். இரண்டு பேர் டவலால் முகத்தை மூடிக்கொண்டு வங்கிக்குள் வருவதைக் கண்டு சந்தேகமடைந்த சந்தேஷ் அவர்களை தடுத்து நிறுத்தினார். உடனே கொள்ளையர்களில் ஒருவன் சந்தேஷின் மார்பில் துப்பாக்கியால் சுட்டான். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்தேஷ் கோமர், எஸ்பிஐ நிறுவனத்தில் அவுட்சோர்சிங் ஊழியராக இருந்தார்.
கொள்ளையர்கள் மற்ற ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி பணத்தை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர். ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த போதிலும் காவல்துறையினர் வருவதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. முகமூடி அணிந்த இருவர் வங்கிக்குள் நுழைவதும், ஒருவர் துப்பாக்கியை சுட்டிக்காட்டுவதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அப்போது அலுவலகத்தில் எட்டு அதிகாரிகள் இருந்தனர். அதிக மக்கள் கூட்டம் இல்லாத பகுதியில் வங்கி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நேரில் கண்ட சாட்சிகளின்படி, கொள்ளையர்கள் 20 முதல் 25 வயதுடையவர்கள். அவர்கள் தஹிசார் ரயில் நிலையம் அருகே சென்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.