கொச்சி (21 ஜன 2020): கொச்சி ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருத பல்கலைக் கழகம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மோடி அரசுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பலதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ளது. குறிப்பாக மாணவர்கள் இப்போராட்டத்தை முன்னின்று நடத்திக் கொண்டு உள்ளனர். ஆனால் அவர்கள் மீது கொலை வெறி தாக்குதலை மத்திய அரசு அரங்கேற்றி வருகிறது.
இதற்கிடையே கொச்சி ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருத பல்கலைக் கழகம் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 15 பேர் கொண்ட பல்கலைக்கழக உறுப்பினர் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
குடியுரிமை சட்டம் மூலம் மாணவர்கள் தாக்கப்படுவது, அரசே வன்முறையை கட்டவிழ்த்து விடுவது என்பன காரணங்களால் இந்த சட்டம் தேவையில்லை என்று தீர்மானம் குறித்த விவாதத்தில் எடுத்து வைக்கப் பட்டது.
அதுமட்டுமல்லாமல் மாணவர்கள், ஆசிரியர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும் இந்த பல்கலைக் கழகம் முன்மொழிந்துள்ளது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்து அமைப்பின் கீழ் இயங்கும் ஒரு பல்கலைக் கழகம் எடுத்துள்ள முடிவு மோடி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது.