புதுடெல்லி (07 டிச 2022): நாட்டில் யாரும் உணவின்றி வெறும் வயிற்றில் தூங்கக் கூடாது என்பதே நமது கலாச்சாரம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாட்டின் கடைசி நபருக்கும் உணவு தானியங்கள் சென்றடைவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலை மற்றும் நிதிப் பாதுகாப்பை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் புதிய பட்டியலை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
“தேசிய உணவுப் பாதுகாப்பின்படி உணவு தானியங்கள் கடைசி மனிதனுக்கும் சென்றடைவதை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை. மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று நாங்கள் கூறவில்லை. கோவிட் சமயத்தில் மக்களுக்கு உணவு தானியங்களை அரசாங்கம் வழங்கியுள்ளது. அதை தொடர்ந்து செய்ய விரும்புகிறோம். யாரும் வெறும் வயிற்றில் தூங்கக்கூடாது என்பது நமது கலாச்சாரம்” என்று டிவிஷன் பெஞ்ச் கூறியது.