புதுடெல்லி (25 மே 2020): வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகத்திற்கு அழைத்து வரும்போது, விமானத்தின் நடு இருக்கைகள் காலியாக விடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த வாரம் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் புரி, விமான சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், நடு இருக்கைகள் காலியாக இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
ஏர் இந்தியா விமானியான தேவேன் யோகேஷ் கனானி என்பவர், மும்பை உயர் நீதிமன்றத்தில்‘பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம், மார்ச் 23 ஆம் தேதி, வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்து வரும் விமானங்களில் நடு இருக்கை காலியாக வைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது. மே 7 ஆம் தேதி முதல் இந்த ஆணையை ஏர் இந்தியா நிறுவனம் பின்பற்றவில்லை’ என்று குற்றம் சாட்டி வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக தீர்ப்பளித்தது. நடு இருக்கைகளுக்கான பயணச் சீட்டை விற்பதற்குத் தடை விதித்தது.
இதையடுத்து தீர்ப்பை எதிர்த்து ஏர் இந்தியா மற்றும் மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. அவசர வழக்காக இன்று அது விசாரிக்கப்பட்டது.
இதுகுறித்த விசாரணையின்போது, “கொரோனா காலக்கட்டத்தில் சமூக விலகல் நடைமுறைகளை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை அறிவு சம்பந்தப்பட்ட விஷயம். பொது வெளியில் ஒரு நபருக்கும் இன்னொருவருக்கும் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால் விமானத்துக்கு உள்ளே எப்படி இருக்க வேண்டும்,” என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே ஏர் இந்தியா நிறுவனத்துக்குக் கேள்வி எழுப்பினார்.
ஏர் இந்தியா சார்பிலும் மத்திய அரசு சார்பிலும் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, “விமானங்களில் வரும் பயணிகள் முறையாக சோதனை செய்யப்படுகிறார்கள். விமானங்களில் நடு இருக்கைகளை காலியாக விட வேண்டும் என்கிற முடிவை மருத்துவ வல்லுநர்களிடம் கலந்தாலோசித்தப் பின்னர்தான் எடுத்தோம்,” என்று விளக்கம் அளித்தார்.
“இப்படி நெருக்கமாக உட்கார வைப்பது எப்படி விமானப் பயணிகளை பாதிக்காது என்று கூறுகிறீர்கள். வைரஸுக்கு, நாம் விமான நிலையத்தில் இருக்கிறோம், அதனால் இங்கு தொற்று ஏற்படுத்தக் கூடாது என்று தெரியுமா. பக்கத்துப் பக்கத்தில் அமர்ந்தால் தொற்று ஏற்படும் என்பது உறுதி,” என்று பதில் வாதம் வைத்தார் தலைமை நீதிபதி.
அதற்கு துஷார் மேத்தா, ஜூன் 16 ஆம் தேதி வரை பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு நீதிமன்றம், “அப்படியென்றால், இந்த பயணச்சீட்டு முன்பதிவு செய்த நாட்களில் திட்டமிட்டபடி விமானங்களை இயக்குங்கள். அதன் பிறகு நடு இருக்கைகள் காலியாக விடப்பட வேண்டும்,” என்று உத்தரவிட்டது.
மேலும் ஜூன் 2 ஆம் தேதி இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்கும்படி உயர் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம்.