புதுடெல்லி (22 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் சாலைகளை ஆக்கிரமித்திருப்பது போராட்டக் காரர்கள் என்று கூறிய போலீஸ் தற்போது அது பொய் என்பது நிரூபிக்கப்பட்டதுள்ளது.
குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. அதில் ஷஹின் பாக் போராட்டம் முதன்மையாக கருதப்படுகிறது. டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறத்தியும் ஷஹின் பாக்கில் அமைதி வழியில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டத்தை சீர்குலைக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தோல்வி அடைந்தது. இறுதியாக சாலைகளை போராட்டக் காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர், எனவே அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 17 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், “பொதுமக்கள் ஒரு தீர்வுக்காக போராடுகிறார்கள். எனவே இப்போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது. அதேவேளை பொதுமக்களுக்கோ, சாலை போக்குவரத்திற்கோ போராட்டக் காரர்கள் இடையூறு செய்யாமல் போராட்டம் நடத்த வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் போராட்டக் களத்தை மாற்றவும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே தலைமையிலான குழு ஒன்றையும் நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் மற்றும் வஜஹத் ஹபீபுல்லா ஆகியோர் சென்றனர். அப்போது பேசிய போராட்டக்காரர்கள், இது பிரதான சாலை இல்லை. டெல்லியிலிருந்து நொய்டா செல்வதற்கான தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அதிலும் ஒரு பகுதியில்தான் நாங்கள் இருக்கிறோம். பல பகுதிகளை போலீஸ் வேண்டுமென்றே அடைத்து வைத்திருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர்கள், இந்தப் பாதையில் மட்டுமே செல்ல வேண்டும் என ஏன் அடம்பிடிக்கிறார்கள். நாங்கள் இங்கிருந்து கலைந்து சென்றுவிட்டால், எங்களை மறந்துவிடுவார்கள்” என்றனர்.
இதனை அடுத்து போராட்டக் காரர்கள் இல்லாத சாலைகளை திறந்து விட உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இதனை அடுத்து இரண்டு மாதங்களாக போலீசாரால் அடைத்து வைக்கப்பட்டிருந்த சாலை ஒன்று திறக்கப்பட்டன.
இதனால் சாலை போக்குவரத்து சற்று சீரடைந்துள்ளது. மேலும் சாலைகளை அடைத்து வைத்திருந்தது போராட்டக் காரர்கள் அல்ல போலீஸ்தான் எனபதும் உறுதியானது.