புதுடெல்லி (13 ஏப் 2020): கொரோனா தகிடுதத்தங்களில் தப்லீக் ஜமாஅத் பட்டியலில் 108 முஸ்லிம் அல்லாதவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சாதி மத பேதமின்றி அனைத்து சமூகத்தினரையும் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் ஜனவரி இறுதியில் கொரோனா பரவ தொடங்கியதும், அரசின் மெத்தனப் போக்கை மறக்கடிக்க தப்லீக் ஜமாஅத்தினர் மீது பழி போடத்தொடங்கியது. டெல்லி நிஜாமுத்தீன் தப்லீக் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால்தான் கொரோனா பரவியது என்ற பொய்யான குற்றச் சாட்டை வைக்கத் தொடங்கினய அரசும், ஊடகங்களும்.
இந்நிலையில் சத்தீஸ்கரில், டெல்லி நிஜாமுத்தீன் தப்லீக் ஜமாத்தில் கலந்து கொண்டவர்கள் என்ற 159 பேர் கொண்ட பட்டியலை உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அந்த பட்டியலை ஆய்வு செய்ததில் அதில் பலரது பெயர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மனுதாரர் தெரிவிக்கையில், டெல்லி மர்கஸுக்கு சென்றதாக கூறப்படும் 159 பேரில் 107 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டதாகவும் மீதமுள்ள 57 பேரை காணவில்லை என்றும் அவர்களை கண்டுபிடிக்க அரசு தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே பிபிசி இந்தி செய்தி நிறுவனம் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி மர்கஸுக்கு சென்றதாகக் கூறி அந்த பெயர் பட்டிலில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டபோது, அதில் ஒருவர், “நான் இந்து மதத்தை சேர்ந்தவன். பிராமணன், எனக்கும் தப்லீக் ஜமாத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். இப்படி பலரும் முஸ்லிம் அல்லாதவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த செய்தி வைரலானதை அடுத்து டெல்லி ஜமாத்துக்கும், கொரோனா வைரஸுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ். சிங்தேவ் தெரிவித்துள்ளார்.