பெய்ஜிங் (13 ஏப் 2020): சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள விவகாரம் அங்கு பொதுமக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த வாரம் பெய்ஜிங்கில் மட்டும் ஒரே நாளில் 99 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஒரேநாளில் 108 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் சீன மக்கள் அச்சத்தில் உள்ளனர். கிட்டத்தட்ட 6 வாரங்கள் கழித்து தற்போது அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-யை கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து சீனா வந்த பயணிகள் மூலமாகவே அங்கு மீண்டும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் பெய்ஜிங் நகரில்தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது முறையாக அங்கு பெரும் வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகப் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஏற்கனவே கொரோனா பரவிய ஊகான் தற்போது வழக்கமான நடவடிக்கைகளுக்கு திரும்பி வரும் நிலையில், தற்போது பெய்ஜிங் கொரோனாவின் கூடாரமாகி வருகிறது.