திருச்சூர் (05 மார்ச் 2020): எனக்கு கொரோனா வைரஸ் இருப்பதையே செய்தி சேனலை வைத்துதான் அறிந்து கொண்டேன் என்று கேரள மாணவி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு கேரளாவில் திருச்சூரை சேர்ந்த மாணவிக்கு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவர் கொரோனா வைரஸ் உருவான வுஹன் நகரத்தில் உள்ள வுஹன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அங்கிருந்து கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி கேரளா திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் உடல் நலம் தேறி ஓய்வில் உள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “முதலில் எனக்கு சாதாரண காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, இருமல், என்றுதான் நான் நினைத்தேன், என்னை பரிசோதித்த மருத்துவர்களும், எனக்கு சிகிச்சை அளித்தாலும், எனக்கு இருக்கும் நோய் குறித்து தெரிவிக்கவில்லை. மூன்று முறை எனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி மீண்டும் மூன்று பரிசோதனைகள் மூலம் கொரோனாவிலிருந்து நிவாரணம் அடைந்ததாக வந்த மருத்துவ பரிசோதனையை அடுத்தே எனக்கு தகவல் வந்தது. அதும் செய்தி சேனல்கள் மூலமே தெரிந்து கொண்டேன். உண்மையில் எனக்கு அதிர்ச்சியாகவும், அதேவேளை நிவாரணம் பெற்றதில் மகிழ்ச்சியாகவும் இருந்தது.” என்றார்.
மேலும் “கேரள அரசு என் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தியதை நான் டிஸ்சார்ஜ் ஆன பின்பே தெரிந்து கொண்டேன்.” என்றும் அவர் தெரிவித்தார்.