புதுடெல்லி (04 மார்ச் 2020): உன்னாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் தந்தையை கொலை செய்ததும் முன்னாள் பா.ஜ., தலைவர் குல்தீப்சிங் செங்கார் தான் என்று டெல்லி நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
உன்னாவ் சட்டமன்ற உறுப்பினரான பாஜகவை சேர்ந்த குல்தீப் சிங் சேங்கர் வீட்டுக்கு வேலைக்கு சென்ற 19 வயது இளம் பெண் ஒருவர், தம்மை சேங்கர் வன்புணர்வு செய்ததாக 2017-ல் குற்றச்சாட்டு வைத்தார்.
இந்நிலையில் ஆயுதம் வைத்திருந்ததாக அந்தப் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நடவடிக்கை கோரி அந்தப் பெண் உ.பி. முதல்வர் யோகி ஆதித்தியநாத் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றார். அதற்கு மறுநாள் போலீஸ் காவலில் அவரது தந்தை இறந்தார். குற்றம்சாட்டப்பட்ட எம்.எல்.ஏதான் இதற்கும் காரணம் என்று கூறப்பட்டது..
இது தொடர்பாக குல்தீப் சிங் மற்றும் அவரது சகோதரர் அதுல் செங்கா் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே குல்தீப் சிங் கைது செய்யப்பட்டநிலையில் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டார்.
மேலும் இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தநிலையில், இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், குல்தீப் சிங் செங்காருடன், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட செங்காரின் சகோதரரையும் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி உத்தரவிட்டார்.