புதுடெல்லி(20/01/2021): விவசாய மசோதாக்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு உச்ச நீதிமன்றம் அமைத்த குழு முன் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாய மசோதாக்களை முழுவதுமாக கைவிடக் கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 10 முறை விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.
இந்நிலையில், விவசாய மசோதாக்களுக்குத் தடை கோரி திமுக உட்பட எதிர்கட்சிகள் போட்ட வழக்கில் மசோதாக்களுக்கு இடைக்கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் சுமூகத் தீர்வு ஏற்பட உச்ச நீதிமன்றம் குழு ஒன்றையும் அமைத்தது.
ஆனால், இக்குழு முழுக்க மத்திய அரசு கொண்டு வந்த மசோதாக்களுக்கு ஆதரவான நிலைபாட்டில் உள்ளவர்கள் எனக் கூறப்படுகிறது. இக்குழுவினர் முன்னிலையில் போராடும் விவசாய சங்கங்களும் இதுவரை ஆஜராகவில்லை. சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை; மூன்று மசோதாக்களையும் முழுவதுமாக நீக்கும் வரை போராட்டத்தைத் தொடர்வோம் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். கூடுதலாக, வரும் குடியரசு தினத்தன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களுடன் போராட்டம் நடத்த அவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு விவசாய சட்டங்களை அமுல்படுத்தினால் மீண்டும் போராட்டத்தைத் தொடரலாம். அதுவரை போராட்டத்தைக் கைவிட்டு, நீதிமன்றம் அமைத்த குழு முன்னிலையில் விவசாயிகள் ஆஜராக வேண்டுமென உச்ச நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.