புதுடெல்லி (21 அக் 2022): மத ரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெறுப்புப் பேச்சுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம்கள் நடத்தும் வணிகங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பாஜக எம்பி பர்வேஷ் வர்மாவின் பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது இந்த மனுவை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ஹிருத்திகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது ஜனநாயகம் மற்றும் மதச்சார்பற்ற நாடு என்று கூறிக்கொள்ளும் ஒரு நாட்டிற்கு இதுபோன்ற அறிக்கைகள் அதிர்ச்சி அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது 21ஆம் நூற்றாண்டு. அறிவியல் விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்று 51வது பிரிவு கூறுகிறது. ஆனால் மதத்தின் பெயரால் இப்படியெல்லாம் நடப்பது அதிர்ச்சியாக உள்ளது. இங்கு வந்துள்ள புகார்கள், நாட்டில் வெறுப்பு நிறைந்த சூழல் நிலவுவதை காட்டுகிறது. ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் சகோதரத்துவம் ஆகியவை அரசியலமைப்பின் முகவுரையில் கூறப்பட்டுள்ளதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில அரசுகள் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு வழக்குகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகார் வரும்வரை காத்திருக்க வேண்டாம். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தாமதமானால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.