புதுடெல்லி (06 மே 2020): கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை தானம் செய்வதற்காக 150 தப்லீக் ஜமாஅத்தினர் ரம்ஜான் நோன்பை முறித்துக் கொண்டுள்ளனர்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா பரவாமல் தடுக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மாற்று முறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
அதில் ஒருமுறை பிளாஸ்மா சிகிச்சை முறை. இதற்கு பிளாஸ்மா தானம் செய்ய, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த தப்லீக் ஜமாஅத்தினர் அதிக அளவில் முன்வந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் 150 க்கும் அதிகமான தப்லீக் ஜமாஅத்தினர் பிளாஸ்மாவை தானம் செய்தனர். அவர்கள் அனைவரும் ரம்ஜான் நோன்பு பிடித்திருந்தாலும், அவசியம் கருதி அனைவரும் ஒருநாள் நோன்பை முறித்துக் கொண்டனர்.
பிளாஸ்மா தானத்திற்கு முன்பு ஏதேனும் சாப்பிட வேண்டும் என்பதால், முஸ்லிம் மதகுருமார்களின் ஆலோசனையின் பேரில் அவர்கள் அனைவரும் நோன்பை முறித்துக் கொண்டனர். இதற்காக இன்னொரு நாளில் அந்த நோன்பை அவர்கள் பிடிப்பார்கள்.
இந்தியாவில் கொரோனாவை பரப்பியது தப்லீக் ஜமாஅத்தினர் என்று இந்துத்வாவினரும், முன்னணி ஊடகங்களும் குற்றச்சாட்டு வைத்த நிலையில் அவைகளுக்கு தங்களது செயல்களால் பதிலடி கொடுத்து வருகின்றனர் தப்லீக் ஜமாஅத்தினர்.