புதுடெல்லி (27 ஏப் 2020): கொரோனா பாதித்தவர்களுக்கு தங்களது பிளாஸ்மாவை தானமாக கொடுக்க முன்வந்த நிலையில் தப்லீக் ஜமாத்தினர் சமூக வலைதளங்களில் ஹீரோக்களாக ட்ரெண்ட் ஆகி வருகின்றனர்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. ஜனவரி மாதம் இறுதியிலேயே இந்தியாவில் கொரோனா வைரஸ் உள் நுழைந்துவிட்ட போதிலும் மார்ச் மாதமே அது வீரியமானது.
இந்நிலையில் கொரோனா பரவ டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் ஆலோசனை கூட்டமே காரணம் என்பதாக இந்துத்வாவினரால் வதந்தி பரப்பப் பட்டது. மேலும் அரசின் பரிந்துரைப்படி டெல்லி கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
இவர்களில் கொரோனா பாதிக்கப்பட்ட தப்லீக் ஜமாத்தினருக்கு எந்தவித கொரோனா அறிகுறியும் இல்லாமல் உள்ளது பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இவர்களில் பலர் தற்போது முழு நிவாரணம் பெற்று வீடு திரும்பிக் கொண்டு இருக்கின்றனர்.
இதற்கிடையே கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைப்பதால் அதற்கு கொரோனா பாதிக்கப்பட்டு நிவாரணம் பெற்றவர்களின் பிளாஸ்மா தேவைப்படுகிறது. இதற்கு தப்லீக் ஜமாத்தினர் உதவ முன்வந்துள்ளனர். அவர்களின் பிளாஸ்மாவை தானமாக கொடுக்க முன்வந்துள்ள நிலையில், தப்லீக் ஜமாத்தினர் தற்போது ஹீரோக்களாக பார்க்கப்படுகின்றனர்.
இதேபோல தமிழகத்திலும் கொரோனா பாதிக்கப்பட்டு நிவாரணம் பெற்றுள்ள முஸ்லிம்கள் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்துள்ளனர்.
இதன் விளைவு சமூக வலைதளங்களில் #TablighiHeroes என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
தப்லீக் ஜமாத்தினர் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வந்துள்ள நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்து முஸ்லிம் என்பதையெல்லாம் மறந்துவிடுங்கள் என்று அறிக்கை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.