கர்நாடகாவில் தமிழர்களுக்கு ஆபத்து!

Share this News:

பெங்களூரு (07 பிப் 2020): பெங்களூரு (07 பிப் 2020): கர்நாடகாவில் பணிபுரியும் தமிழர்களின் வேலைக்கு ஆபத்து வந்துள்ளது.

கர்நாடக அரசு தனது மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் உட்பட பல துறை சார்ந்த தொழில்களிலும், 75 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க வகை செய்யும், வகையிலான சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

‘கர்நாடக தொழிலாளர்களுக்கான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், சிறு மற்றும் குறு தொழில்கள், கூட்டாண்மை சட்டம்’ என்ற பெயரில் எடியூரப்பா அரசு இந்த சட்டத்தை கொண்டுவரப்போகிறதாம்.

இதுபற்றி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சுரேஷ்குமார் கூறுகையில், இந்த சட்டம் பிரிவினைவாதம் கிடையாது. உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று கொண்டுவரப்படும் சட்டம் என்று விளக்கம் கூறியுள்ளார்.

“கன்னடர்கள்தான் தங்களுக்கு உள்ளூரிலேயே பாகுபாடு காட்டப்படுவதாகவும், வேலை கிடைக்கவில்லை என்றும், மற்றவர்கள் வந்து வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

இது ஒரு தீவிரமான கவலை. எனவே அனைத்து மக்களையும், சட்ட வல்லுநர்களையும் கலந்தாலோசித்த பிறகு , இந்த மசோதாவை விரைவில் இறுதி செய்வோம், ” என்றார் சுரேஷ்குமார்.

கன்னடராக யார் கருதப்படுவார்கள் என்பதற்கான அளவுகோலை இறுதி செய்து தொழிலாளர் நலத்துறை ஏற்கனவே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

“தொடர்ந்து 15 ஆண்டுகளாக கர்நாடகாவில் வசிக்க வேண்டும், அதேபோல கன்னடத்தில் எழுதப், படிக்க தெரிந்திருக்க வேண்டும், அவர்கள்தான், கன்னடர்களாக கருதப்படுவார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

“கர்நாடகாவில் உள்ளவர்கள் கன்னடத்தைப் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது நியாயமான நிபந்தனைதான். இங்கே பணியாற்றிக் கொண்டு உள்ளூர் மொழி தெரியாமல் இருக்க கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று அமைச்சர் சுரேஷ் குமார் மேலும் கூறினார்.

இந்த மசோதா மாநில சட்டமன்றத்தின் வரவிருக்கும் பட்ஜெட் அமர்வில் தாக்கல் செய்யப்படுமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஏனெனில் இந்த மசோதாவின் தயாரிப்பு பணிகள் இன்னும் நடக்கின்றன.

“இந்த சட்டத்தின் அவசியம் மற்றும் தன்மைகள் குறித்து அனைத்து மக்களையும், அதை எதிர்ப்பவர்களையும் கூட உணர வைப்போம் என்று நம்புகிறோம். அனைவரின் ஒருமித்த கருத்துடன் இதை செயல்படுத்த விரும்புவதால் நாங்கள் தொழில் துறையினர் மற்றும் தொழில்துறை தலைமைகளுடன் பேசி வருகிறோம், ” என்றும் அமைச்சர் கூறினார்.


Share this News:

Leave a Reply