லக்னோ (08 ஜன 2023): உத்திர பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் எட்டாம் வகுப்பு மாணவிக்கு லவ் லட்டர் கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கன்னுஞ் மாவட்டம் பலர்பூர் பகுதியில் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஹரிஒம் சிங் என்ற நபர் ஆசிரியராக வேலை செய்துவந்துள்ளார்.
இந்நிலையில், ஆசிரியர் ஹரிஓம் சிங் கடந்த 30ம் தேதி அந்த 8-ம் வகுப்பு மாணவிக்கு ‘ வாழ்த்து மடல் (கிரீட்டிங் கார்டு)’ கொடுத்துள்ளார்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அந்த மாணவி கிரீட்டிங் கார்டை திறந்து பார்த்துள்ளார். அப்போது, ஆசிரியர் கைப்பட எழுதிய காதல் கடிதம் இருந்துள்ளது.
இதைகண்டு அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனடியாக, தனது மகளுக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 8ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த ஆசிரியர் ஹரிஒம் சிங் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஆசிரியர் ஹரிஓம் சிங் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டாரா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.