ஜித்தா (08 ஜன 2023): சவூதி அரேபியாவில் ஹஜ் மற்றும் உம்ரா சேவைகளின் மாநாடு மற்றும் கண்காட்சியை திங்கள் கிழமை தொடங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபியாவிற்கு ஹஜ் மற்றும் உம்ரா யாத்த்ரீகர்கள் பல லட்சம் பேர் இரண்டு புனித மசூதிகள் மற்றும் இஸ்லாத்தின் புனித தளங்களைப் பார்வையிட வருகை புரிகிறார்கள்.
இதனடிப்படையில் இரண்டு மசூதிகளில் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதில் சவூதி அரேபியா கவனம் செலுத்தி வருகிறது.
இதனடிப்படையில் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஹஜ் எக்ஸ்போ, மாநாடு மற்றும் கண்காட்சி ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 12 ஆம் தேதி முடிவடையும் என்று அறிவித்துள்ளது. இந்த நிகழ்வு ஜித்தாவில் நடைபெறவுள்ளது.
மேலும் “ஹஜ் உம்ராவிற்கு வரும் யாத்ரீகர்களுக்கு இலகுவாக்கும் வகையில், இரண்டு புனித மசூதிகளில் யாத்ரீகர்களின் சமய மற்றும் கலாச்சார அனுபவங்களை மேம்படுத்தும் வகையில், நவீனப்படுத்தும் பல திட்டங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.” என்று சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் “200க்கும் மேற்பட்ட உலகளாவிய நிறுவனங்களின் தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் வெற்றிகரமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்” என்று சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் தவ்பீக் பின் ஃபவ்ஜான் அல் ராபியா தெரிவித்துள்ளார்.
இந்த கண்காட்சியில் 56 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர், மேலும் 400 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.