புதுடெல்லி (31 மே 2020): மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை நீக்கிவிட்டு தேசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்த கே.வி.காமத், புதிய நிதியமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாரமன் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை அவரால் சரிவர சரிசெய்ய முடியவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.
இந்நிலையில் பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளும் இணைந்து, தேசிய வளர்ச்சி வங்கியைத் தொடங்கின. அதன்படி, பிரிக்ஸ் அமைப்பின் தலைநகரான சீனாவின் ஷாங்காயில் தொடங்கப்பட்ட அந்த வங்கியின், முதல் தலைவரை நியமிக்கும் உரிமை இந்தியாவுக்கு கிடைத்தது.
இதில் கே.வி.காமத் கடந்த 2015ல் இவ்வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், 5 ஆண்டு காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து இப்பதவியில் இருந்து நேற்று அவர் ராஜினாமா செய்தார்.
தற்போது நிர்மலா சீதாரமனை மத்திய நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்துவிட்டு கே.வி.காமத் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்காகவே காமத் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.