மும்பை (31 மே 2020): பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வைத்து அகமதாபாத்தில் நடைபெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்வு, குஜராத்திலும் மும்பை மற்றும் டெல்லியிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டியுள்ளார்.
எந்தவொரு திட்டமும் இல்லாமல் ஊரடங்கை செயல்படுத்தியது மத்திய அரசு ஆனால் இப்போது மாநிலங்களை குற்றம் சாட்டுகிறது என்று ராவத் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் நடைபெறும் விகாஸ் அகாடி அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு முயன்று வருகிறது, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டது என்று மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது.. அவ்வாறெனில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களின் அரசையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ராவத் தெரிவித்தார்.
“குஜராத்தில் அமெரிக்க அதிபர் கலந்து கொண்ட நிகழ்வில் பெருங் கூட்டம் கூடியது. அதுமட்டுமல்லாமல், டிரம்புடன் வந்த சில பிரதிநிதிகள் டெல்லி மற்றும் மும்பைக்கு விஜயம் செய்தனர், இது வைரஸ் பரவ வழிவகுத்தது, ”என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
“தாக்கரே சர்க்காருக்கு” அடித்தளம் போட்ட முக்கிய தலைவர் ஷரத் பவார் என்றும், அவரால் மட்டுமே அரசாங்கத்தின் எதிர்காலத்தை கணிக்க முடியும் என்றும் சஞ்சய் ரவுத் கூறினார்.