புதுடெல்லி (21 டிச 2022): உலகம் முழுவதும் கொரோனா மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதால் பாரத் ஜோடோ யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒன்றிய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒன்றிய அரசு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், மரபணு வரிசைமுறையை அதிகரிக்கவும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், பாரத் ஜோடோ யாத்திரையின் போது கோவிட் நெறிமுறையைப் பின்பற்றுமாறு இரு தலைவர்களுக்கும் ஒன்றிய சுகாதார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பயணத்தின் போது முகமூடிகள் மற்றும் சானிடைசர்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்டவர்களை மட்டுமே பயணத்தில் சேர்க்க வேண்டும். இது முடியாத பட்சத்தில் தேச நலனை கருத்தில் கொண்டு பயணத்தை ஒத்திவைக்க முடிவு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில், எங்களுக்கு மட்டும் ஏன் அறிவுரை வழங்குகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் பவன் கெடா கேள்வி எழுப்பியுள்ளார். நாடு முழுவதும் இதேபோன்ற ஆலோசனையை அரசு வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாரத் ஜோடோ யாத்ரா ஹரியானாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து தொடங்கிய பயணம் ஹரியானாவை அடைந்த பிறகு பஞ்சாப் செல்லும்.