எனது வாழ்வாதாரத்தை என் கண் முன்னே அழித்தனர் – முஸ்லிம் வியாபாரி கதறல்!

Share this News:

பெங்களூரு (11 ஏப் 2022): எனது வாழ்வாதாரத்தை என் கண் முன்னே காவி துணி ஏந்திய குழுக்கள் அழித்தனர் என்று முஸ்லிம் பழ வியாபாரி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள நுக்கிகேரி ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள ஏழை முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு பழ வண்டிகளை இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை சேதப்படுத்தினர்.

இரு வாரங்களுக்கு முன்பு ஸ்ரீராம்சேனை அமைப்பினர், இஸ்லாமிய வணிகர்களை வளாகத்திலிருந்து வெளியேற்ற கோவிலை நிர்வகிக்கும் அமைப்பிற்கு காலக்கெடுவை வழங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரிகள் சேனாவின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ளவில்லை. இதனை அடுத்து கிட்டத்தட்ட 10 பேர் கொண்ட இந்துத்துவா கும்பல் முஸ்லிம் வியாபாரிகளின் வண்டிகளை சேதப்படுத்தினர்.

நான்கு பழ வியாபாரிகளில், தர்பூசணி விற்ற 68 வயதான நபிசாப் கில்லேடர் என்பவர் கூறுகையில், “நான் அன்று நோன்பு வைத்து இருந்தேன்; சிலர் வந்து என் தர்பூசணி வண்டியை முழுவதுமாக அழித்தார்கள்; நான் என்ன செய்திருக்க முடியும்? நான் ஒரு வயதானவன்; அவர்களைத் தடுக்க நான் குறுக்கிட்டால் அவர்கள் என்னையும் அடித்திருப்பார்கள்; அதனால் நான் ஒரு மூலையில் நின்றேன்; அவர்கள் எனது வருமான ஆதாரத்தை அழிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில் “நான் இங்கு 15 வருடங்களாக பழங்களை விற்பனை செய்து வருகிறேன்; ஆனால் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை; இது எனது பக்க வியாபாரம்; கொஞ்சம் பணம் சம்பாதிக்க வேண்டும்; ஆனால் இப்போது அது இல்லாமல் போய்விட்டது. நான் ஒரு ஏழை; இதன் மூலம் எனக்கு வருமானம் கிடைக்கும் என்று நினைத்தேன்; ஆனால் இப்போது அனைத்தும் அழிந்துவிட்டன” என்றார்.

இதற்கிடையே தர்பூசணி பழங்கள் தரையில் சிதறிக் கிடப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பத்திரிக்கையாளர் ஹரிஷ் உபாத்யா ட்வீட் செய்துள்ளார்.

நபிசாப் 15 ஆண்டுகளாக இந்த பழ வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் காவலாளியாக பணிபுரியும் அவர், அடித்தளத்தில் உள்ள சிறிய அறையில் தங்கியுள்ளார்.

பழ வண்டி விற்பனையாளர் சனிக்கிழமை ஆறு குவிண்டால் தர்பூசணி வாங்கியதாக கூறினார். “நான் ஒரு குவிண்டால் தர்பூசணியை விற்று 300 ரூபாய் சம்பாதித்தேன்; நான் இங்கு (கோவில்) பெரும்பாலும் சனிக்கிழமைகளில் மட்டுமே வருவேன்; மீதமுள்ள நாட்களில் நான் வேலை செய்யும் கட்டிடத்திற்கு அருகில் எங்காவது விற்கிறேன்; இதன் மூலம் 300-500 ரூபாய் சம்பாதிக்கிறேன்” என்றார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து 10 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பழ வண்டியை சேதப்படுத்தியதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிஜாப் தடை பிரச்சனைக்குப் பிறகு, வலதுசாரிகள் முஸ்லிம்களைக் குறிவைத்து அவர்களின் பொருளாதாரத்தை அழிப்பதில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மசூதிகளில் ஒலிப்பெருக்கியை தடை செய்ய வேண்டும், ஹலால் இறைச்சியை தடை வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply