லக்னோ (11 ஏப் 2022): முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டல் விடுத்த சாமியார் பஜ்ரங் முனிதாசுக்கு எதிராக உத்தரப் பிரதேசம் கைராபாத் முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இந்து புத்தாண்டு விழாவையொட்டி உத்தரப் பிரதேசம் கைராபாத் நகரத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசின் ஆசிரமத்தின் சாமியார் பஜ்ரங் முனிதாஸ் தலைமையில் ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது.
அந்த ஊர்வலம் ஷேஷே வாலி மசூதி அருகே சென்றடைந்தபோது பேசிய சாமியார் முனிதாஸ், எந்த ஒரு இந்து பெண்ணையும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் கிண்டல் செய்வதாக தெரிந்தால் நான் முஸ்லிம் பெண்களைக் கடத்தி பொது இடத்தில் வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டல் விடுத்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. சாமியாரை கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை அடுத்து சாமியார் தலைமறைவானார். தலைமறைவாக உள்ள பஜ்ரங் முனியை உடனடியாகக் கைது செய்யக் கோரி கோசங்களை எழுப்பியபடி கைராபாத்தில் குழந்தைகளுடன் பெண்கள் சாலையில் பேரணியாகச் சென்றனர்.
மேலும் அகில இந்திய மாணவர் சங்கம் (ஏஐஎஸ்ஏ) மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (சிஎஃப்ஐ) ஆகியவற்றின் செயல்பாட்டாளர்கள் ஏப்ரல் 9 ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள உத்தரப் பிரதேச பவனுக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.