கொரோனா வதந்திகளும் அச்சங்களும் – அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

Share this News:

கொரோனா வைரஸ் பற்றிய அச்சங்களும் வதந்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. கொரோனா வைரஸ் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசிய தகவல்களை, இங்கு கேள்வி – பதிலாகத் தருகிறார் பொதுநல மருத்துவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லா.

கொரோனா வைரஸ், சீனா உருவாக்கிய உயிரியல் ஆயுதமா?

டாக்டர் ஃபரூக் அப்துல்லா
இல்லை. சீனாவின் வூஹான் நகரத்தில் வைராலஜி ஆய்வகம் உள்ளது. இந்த வைரஸும் வூஹான் நகர உயிரினச் சந்தையிலிருந்து பரவியதாகக் கூறப்பட்டவுடன், இரண்டுக்கும் இடையே முடிச்சு போட்டுவிட்டார்கள். கொரோனாவும் சளி, இருமல் போன்ற சீஸனல் வைரஸ் காய்ச்சலை ஏற்படுத்தும் ஒரு வைரஸ்தான். இது வேறு உயிரினங்களுக்குள் சென்று வரும்போது பலம்பெற்று மனிதனைத் தாக்கும். இந்த முறை, வௌவால்களிடமிருந்து இந்த வைரஸ் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதுவும் உறுதிப் படுத்தப்படவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த, உலக சுகாதார நிறுவனம் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?

உலக சுகாதார நிறுவனம், இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவாது என முதலில் நினைத்தது. ஆனாலும் பல நாடுகளிலும் வைரஸ் தொற்று கண்டறியப்படவே, கொரோனா வைரஸ் தொற்றை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக அறிவித்தது. இதன்மூலம் பல நாடுகளும் தங்கள் நாட்டுக்குள் நுழையும்/வெளியேறும் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன.

இது நமக்கும் அச்சுறுத்தலா?

கேரளாவில் இதுவரை மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு, அந்த மாநிலத்தில் ‘சுகாதார அவசர நிலை’ அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள நம் நாட்டில் கொரோனா வைரஸ் போன்ற தொற்றும் வைரஸ் நுழைந்தால் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக அமையும். மத்திய, மாநில அரசுகள் துரிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தற்போதைக்கு கொரோனா நம்மிடையே பரவாமல் தடுப்பதற்கு முக்கிய காரணம், நமது உஷ்ணமான வெப்பநிலை. ஏனெனில், வூஹானின் அதிகபட்ச வெப்பம் 10 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்சம் 2 டிகிரி செல்சியஸ். நமது நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலையே 25 டிகிரிக்கும்மேல்.

சீனா தனது நகரங்களைத் தனிமைப்படுத்தியிருப்பது நோய்த்தொற்றைத் தடுக்குமா?

இது ஓரளவுக்குதான் உதவும். காரணம், நோய் பரவத் தொடங்கிய 2019, டிசம்பர் முதல் 2020, ஜனவரி மாதத்தின் ஆரம்பக்காலகட்டத்திலேயே இதைச் செய்யாமல், காலம் தாழ்த்தி செய்திருக் கிறார்கள். இதனாலேயே சீனா முழுவதும் நோய்த்தொற்று அதிகரித்தது. இருப்பினும், இந்த வைரஸ் தொற்றுப் பரவலின் மையப்புள்ளியான வூஹான் நகரைத் தனிமைப்படுத்துவது நல்லதுதான்.

கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் என்னென்ன?

அதிகமான காய்ச்சல், சளியுடன் இருமல், மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு, தொண்டை வலி.

தொற்றைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

அடிக்கடி கைகளை சோப் போட்டுக் கழுவவும். கண்ட இடங்களில் கைகளை வைக்கக் கூடாது. கைகுலுக்குவதைத் தவிர்க்கவும். சளி, இருமல் அறிகுறிகள் இருப்பின் முகக்கவசம் அணியவும். சளி, இருமல் இருப்பவர்களிடமிருந்து மற்றவர்கள் குறிப்பாக குழந்தைகள், முதியோர் விலகி இருக்கவும். உடனே மருத்துவரை அணுகவும்.

தடுப்பூசிகள் இருக்கின்றனவா, நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியுமா?

இது புதிய வகை வைரஸ் என்பதால் தடுப்பூசி கண்டறியப்படவில்லை. நியூமோகாக்கல் தடுப்பூசி, ஹிமோஃபில்லஸ் இன்ப்ளூயன்சா பி போன்ற தடுப்பூசிகள் போட்டுக்கொண்டாலும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்காது. இந்த வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. அதிகபட்சம் ஒரு வருடத்தில் சந்தையில் கிடைக்கும். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக எந்தக் கஷாயமும் வேலை செய்யாது. வதந்திகளை நம்ப வேண்டாம்.

கொரோனா வைரஸ் தொற்று, மரணத்தில்தான் முடியுமா?

இதுவரை உயிரிழந்தவர்கள் 2.2 சதவிகிதம் பேர் மட்டுமே. 100-ல் 98 பேர் உயிர் பிழைத்துவிடுகிறார்கள். இரண்டு சதவிகிதத்திலும் பெரும்பான்மையினர் வயது முதிர்ந்தோர் மற்றும் இதயநோய், சிறுநீரக நோய், நீரிழிவு நோய்களைக்கொண்டவர்களே. பயப்பட வேண்டாம்.

சீனர்கள் வௌவால், கீரி, பாம்பு போன்ற உயிரினங்களை உண்பதால்தான் இதுபோன்ற வைரஸ்கள் பரவுகின்றனவா?

கொரோனாகூட வௌவாலிலிருந்து பரவியதாக அறியப்பட்டுள்ளது. சீனாவில் முன்பு வந்த சார்ஸ் வைரஸ்கூட வௌவாலிருந்து பரவியதுதான். இன்னும் நிறைய கொரோனா வைரஸ்கள் உலகின் பல்வேறு விலங்கினங்களில் இருக்கின்றன. எப்போதெல்லாம் மனிதர்களுக்கும் விலங்கினங் களுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இதுபோன்ற வைரஸ்கள் மனிதனுக்கும் பரவுகின்றன. அப்படி பரவிய பிறகு, அந்த வைரஸ்கள் மனிதனுக்குள் வாழ்வதற்கு ஏற்றபடி தங்களைத் தாங்களே தகவமைத்துக் கொள்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க மாமிச உணவைத் தவிர்க்க வேண்டுமா?

தேவையில்லை. நன்கு வேகவைத்துச் சாப்பிடலாம். முட்டை ஹாஃப் பாயிலைத் தவிர்க்கவும்.

நன்றி ஜூனியர் விகடன்


Share this News:

Leave a Reply