துபாய் (15 டிச 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த மோசடியினால் சம்பளம் இன்றித் தவித்த 12 இந்திய பெண்கள் மீட்கப் பட்டுள்ளனர்.
இந்திய துணைத் தூதரகம் மற்றும் அஜ்மான் இந்திய சங்கம், மற்றும் காவல்துறையின் உதவியுடன், இவர்கள் மீட்கப் பட்டுள்ளனர்.
விசாரணையில், இவர்கள் அனைவரும் முகவர்கள் மூலம் ஏமாற்றப் பட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்டோரிடம் கூடுதல் விசாரணை மேற்கொண்ட பிறகு, அவர்கள் பாதுகாப்பாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப் படுவார்கள். இவர்களுக்கான விமான டிக்கெட் செலவுகளை, அஜ்மான் இந்திய சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் 11 பேரும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளுக்கு அஜ்மான் இந்திய சங்கம் பொறுப்பேற்றுக் கொண்டு, அதனை நிறைவேற்றி வருகிறது.
போலி முகவர்கள் மூலம், வீட்டு வேலைகளுக்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தரும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனைத் தடுக்க, இந்திய அரசு தேவையான விழிப்புணர்வை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று அய்மான் சங்கத்தின் தலைவர் அப்துல் சலாம் தெரிவித்துள்ளார்.