தோஹா (08 ஜூலை 2021): சவூதி, கத்தார் எல்லை பாலைவனத்தில் சிக்கித் தவித்த இந்தியப் பெண் ஒருவர், சமூக ஆர்வலர்களால் மீட்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார்.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த எலிசம்மா என்ற பெண் கத்தார் நாட்டுக்கு வீட்டு வேலைக்காக சென்றார்.
கத்தாருக்கு வந்தபின் எலிசம்மா அவரது ஸ்பான்சரால் சவூதி, கத்தார் எல்லையில் உள்ள சல்வா பாலைவனத்தில் ஆடுகள் மேய்க்க பணிக்கப் பட்டுள்ளார்.
சரியான உணவின்றி, அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கடந்த இரண்டரை வருடங்களாக இந்த கடும் அவஸ்தையை எலிசம்மா சந்தித்துள்ளார்.
இது குறித்து சவுதியில் உள்ள அவரது உறவினருக்கு தெரியவர, சமூக ஆர்வலர்கள் உதவியுடனும், அல் ஹசா போலீசார் உதவியுடனும் எலிசம்மா மீட்கப்பட்டு தாயகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார்.
வளைகுடா நாடுகளுக்கு ‘வீட்டு வேலை’ பணிகளுக்குச் செல்வோருக்கு, இந்த நிகழ்வு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.