உக்ரைன் விமானத் தாக்குதல் பற்றி ஈரான் கூடுதல் தகவல்!

உக்ரைன் விமான விபத்து
Share this News:

ஈராக் (21 ஜன 2020): உக்ரைன் பயணிகள் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக் கொண்ட நிலையில், இரண்டு ஏவுகணைகள் விமானத்தை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஈரானின் போக்குவரத்துத் துறை, முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

176 பயணிகளின் உயிா்களை பலி வாங்கிய இந்த விமான விபத்துக்கு இயந்திரக் கோளாறுதான் காரணம் என்று விபத்து நடந்தபோது கூறி வந்தது ஈரான். மூன்று நாட்கள் கடந்த பிறகு, தவறுதலாக உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உண்மையை ஒப்புக் கொண்டு விசாரணையைத் தொடங்கியது.

உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து வலைதளத்தில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் முகமது ஜாவத் ஸெரீஃப் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

“டெஹ்ரானில் உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து ராணுவம் நடத்திய விசாரணையில், மனிதத் தவறு காரணமாகவே அந்த விபத்து நேரிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடமும், பாதிக்கப்பட்ட நாடுகளிடமும் மன்னிப்பு கோருகிறோம்!” என்று அதில் ஜாவத் ஸெரீஃப் குறிப்பிட்டுள்ளாா்.

இதனைத் தொடா்ந்து, ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“இராக்கில் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய பிறகு, அமெரிக்க விமானங்கள் எங்கள் மீது பதிலுக்குத் தாக்க நேரிடும் என எதிா்பாா்க்கப்பட்டது. அதனால், ஈரானின் வான் பாதுகாப்பு தளவாடங்கள் அனைத்தும் அதிகபட்ச உஷாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இச் சூழலில், உக்ரைன் இன்டா்நேஷனல் ஏா்லைன்ஸ் விமானம் ஆபத்து நிறைந்த ராணுவ நிலையை நோக்கி வந்தது. அந்த விமானம் எதிரி நாட்டுப் போா் விமானம் என தவறாகக் கருதப்பட்டு, இடைமறி ஏவுகணை மூலம் அது சுட்டு வீழ்த்தப்பட்டது!”

இவ்வாறு ராணுவம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply