ரஜினி விரைவில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பார்: கி.வீரமணி!

Share this News:

சென்னை (21 ஜன 2020): பெரியார் குறித்த அவதூறு கருத்துக்கு “மன்னிப்பு கேட்க முடியாது!” என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ள நிலையில் அவர் விரைவில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பார் என்று திக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலை, அது வந்து உடையில்லாம, செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பலரும் ரஜினியின் அவதூறு கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, outlook பத்திரிகையின் ஆதாரத்தின் அடிப்படையிலேயே அவ்வாறு பேசினேன், எனவே மன்னிப்பு கேட்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினியின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, “ரஜினி துக்ளக் ஆண்டு விழாவில் பேசியது தவறானது. 1971-ல் நடந்த மாநாட்டில் ராமர், சீதையை நிர்வாணமாக கொண்டு வந்தார் என்று ரஜினி குறிப்பிட்டார். அதை துக்ளக் எழுதியது என்று கூறுகிறார். ஆனால் தற்போது அந்த ஆதாரத்தை ரஜினி அளிக்கவில்லை.

மன்னிப்பு கேட்பதும் வருத்தம் தெரிவிப்பது நல்ல மனிதப்பண்பு, அது ரஜினியிடம் இல்லை. இன்றைய அவரின் பேட்டியே அதற்கு சிறந்த முன்னோட்டம். ரஜினி அரசியலுக்கு வந்தால் எப்படி நடப்பார் என்று தெரிகிறது. அவரின் அரசியல் பொய்யில் இருந்துதான் தொடங்குகிறது.

அவர் விரைவில் நீதிமன்றத்தில் பதில் சொல்வார். நீதிமன்றத்தில் அவர் பதில் சொல்லவேண்டிய காலம் வரும். அவர் தனக்கு தானே குழி தோண்டிக் கொள்கிறார். அவரின் தர்பார் வேண்டுமானால் ஓடலாம், ஆனால் கண்டிப்பாக ராஜ தர்பார் ஓடாது,” என்று தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply