தோஹா (10 ஆக 2021): உலகின் மிகச்சிறந்த சர்வதேச விமான நிலையங்களில் கத்தாரின் ஹாமத் சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து, 2021-ஆம் ஆண்டுக்கான புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது ஸ்கை ட்ராக்ஸ் நிறுவனம்.
அதில் கத்தாரின் ஹாமத் சர்வதேச விமான நிலையம் உலகின் சிறந்த விமான நிலையம் என்ற பெயரை எடுத்து முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டில் கத்தார் மூன்றாவது இடத்தில் இருந்தது. தற்போது முதலிடத்தை வென்றுள்ளது.
இதேபோல் இந்த 2021 ஆம் வருடத்திற்கான சிறந்த விமானங்கள் பட்டியலிலும் கத்தார் ஏர்வேஸ் முதலிடம் பிடித்துள்ளது.
மேலும் டோக்கியோவின் உள்ள ஹனெட்டா விமான நிலையம் இரண்டாவது இடத்திலும், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
சிங்கப்பூர் விமான நிலையம் கடந்த பல வருடங்களாக முதலிடத்தில் இருந்த நிலையில் இந்த வருடம் 3-வது இடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
மேலும் துபாய் சர்வதேச விமான நிலையம் 19-வது இடத்திலும், சவுதி அரேபியாவின் ஜித்தா விமான நிலையம் 50-வது இடத்திலும், ஓமானின் மஸ்கட் விமான நிலையம் 56-வது இடத்திலும், சவுதி ரியாத் விமான 58-வது இடத்திலும் உள்ளது.
அபுதாபி விமான நிலையம் 84-வது இடத்திலும், பஹ்ரைன் விமான நிலையம் 85-வது இடத்திலும், சவுதி தமாம் விமான நிலையம் 87-வது இடத்திலும் உள்ளது .
இந்தியாவின் டெல்லி விமான நிலையம் இந்தமுறை 45-வது இடத்திலும் (2020-யில் 50-வது இடத்தில் இருந்து), ஹைதராபாத் 64-வது இடத்திலும் பெங்களூர் 71-வது இடத்திலும் உள்ளது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக குவைத் சர்வதேச விமான நிலையம் உலகின் 100 சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் மீண்டும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.