Mothering a Muslim – Nasia Erum
’ஒரு முஸ்லீமின் தாயாக இருத்தல்” எனும் பொருள்படும் நஸியா எருமின் இப்புத்தகம், அவர் 2014ல் தாயான போது ஏற்பட்ட அச்சத்தை கருவாக கொண்ட நூலாகும். இன்றைய சூழலில் அதிகம் பேசப்படாதொரு விசயத்தைக் கையிலெடுத்து மிகுந்த கவனத்துடன் கையாண்டுள்ளார் நஸியா. இந்தியாவில் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள அடிப்படைவாத முஸ்லீமாக இல்லாமல் மைய நீரோட்டத்தில், பொதுவான சூழலில் தன் குழந்தை வளர வேண்டும் என்று நினைக்கும் சமூகத்தின் மேலடுக்கில் உள்ள முஸ்லீமான நஸியா எருமின் இப்புத்தகத்தைப் படிக்கும் எவரும் அப்படி எளிதாக கடந்து விட முடியா அளவு இந்தியாவின் தற்கால சூழலைப் பட்டவர்த்தனமாக படம் பிடித்து காட்டியுள்ளார்.
ஒரு குழந்தையின் உட்புற மற்றும் வெளிப்புற உலகின் அனுபவங்களுக்கு மத்தியில் தாய் தான் பாலமாக இருக்கிறார். சமீப காலமாக நம் தேசம் குறிப்பாக வட இந்தியா மத கோடுகளால் பிரிக்கப்பட்டதாகவே உள்ளது. அந்தக் கோடுகள் ஏற்படுத்தும் வலிகள் சமூகத்தின் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. குறிப்பிட்ட சில சமூகங்கள் மீது வெறுப்பை உமிழும் தேசத்தைத் தன் குழந்தைக்கு ஒரு தாய் எவ்வாறு அறிமுகப்படுத்துவாள் எனும் தவிப்பை இப்புத்தகத்தில் வெளிப்படுத்துகிறார். தன் குழந்தைக்குப் பெயர் வைக்கும் போது பார்த்தவுடன் முஸ்லீம் என்று தெரியும் பெயரை வைக்காமல் கொஞ்சம் பொதுவான பெயர் வைக்கலாமே எனும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார். பிற சமூகங்களின் தாய்களைவிட ஒரு முஸ்லீம் தாயின் வருத்தம் எங்ஙனம் வித்தியாசப்படுகிறது என்பதை ஆசிரியர் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
அனைத்து தரப்பு மக்களும் படிக்கும் தில்லியின் 118 சிறந்த பள்ளி கூடங்களில் உள்ள முஸ்லீம் குழந்தைகளின் பெற்றோர்கள், அப்பள்ளியின் ஆசிரியர்கள், நிர்வாகிகள் என பலரிடம் அவர் எடுத்த பேட்டிகளை அடிப்படையாக வைத்தே இந்த நூலை எழுதியுள்ளார். முஸ்லீமின் அடையாளம் குறித்த சிக்கலைக் குறிப்பாக பள்ளிகூடங்களில் எவ்வாறு வெளிப்படுத்துதல் என்பதையும் இந்த அடையாள புரிதல் சமீப காலங்களில் எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதையும் தெளிவாக அடையாளம் காட்டுகிறார் ஆசிரியர். பிற குழந்தைகள் ஒழுங்கீனம் செய்யும் போது அவர்களின் உடலமைப்பை வைத்து குண்டு, சப்பை என்றோ பிற காரணங்களைக் கொண்டோ கிண்டல் செய்வதையும் அதே தவறை ஒரு முஸ்லீம் குழந்தை செய்யும் போது பாகிஸ்தானி என்று அடையாளப்படுத்தலையும் அதை மெளனமாக கடக்கும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினரையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.
மேலும், முஸ்லீம் சமூகமும் வளைகுடா வாழ்வுக்குப்பின் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் அரபு கலாச்சாரத்தையும் ஒன்றாக குழப்பி மூடிய சமூகமாக மாறுவதையும் தவறென கண்டிக்கும் நஸியாவின் இப்புத்தகம், இந்தத் தேசம் வெறுப்பு விதைகளை சிறு வயதிலே விதைத்து நாட்டைத் துண்டாக்குவதைத் தடுக்க ஆசைப்படும் அனைவரும் குறிப்பாக கல்வியாளர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டியதொன்று. முகத்தில் அறையும் உண்மை தான் எனினும் தீர்வை நோக்கி நகர பிரச்னை புரிந்து கொள்ளல் அவசியம் எனும் அடிப்படையில் இன்றைய சூழலில் படிக்கப்பட வேண்டிய புத்தகம் என்பதில் மாற்று கருத்திருக்க வாய்ப்பில்லை.
– பொறியாளர் ஃபெரோஸ்கான்.