சென்னை (21 மார்ச் 2020): தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கரோனா பாதிப்பு எதிரொலியாக, தற்போது 9ஆம் வகுப்பு வரை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 27ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், அதனை ஒத்திவைக்க வேண்டும் என எம்எல்ஏ தமிமுன் அன்சாரி பேரவையில் இன்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 10ஆம் பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு இத்தேர்வுகள் நடத்தப்படும் எனக் கூறிய முதல்வர் 9.45 லட்சம் மாணவர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அதேசமயம் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.