கும்பகோணம் (21 மார்ச் 2020): கும்பகோணம் அருகே டாக்டர் ஒருவர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் பகுதியில், அதிகளவில் துப்பாக்கிகள் புழக்கம் இருப்பதாகவும், இதனால் துப்பாக்கி பயன்படுத்துவது அதிகமாகியிருப்பதாகவும் குற்ற தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் எங்கு, எப்படி துப்பாக்கி கைக்கு வருகிறது; இதை யார் விற்பனை செய்கிறார்கள் என கண்டுபிடிக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து, கும்பகோணம் அடுத்த விளந்தகண்டம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டு வருவதைக் கண்டுபிடித்ததுடன் அவரைக் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையின்போது சக்திவேல் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. மேலும், அவர் துப்பாக்கிகள் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இதன் பின்னணியில் `திருப்பனந்தாள் அடுத்த மகாராஜபுரத்தைச் சேர்ந்த டாக்டர் ராம்குமார் என்பவர் உள்ளதும் அவர்தான் கள்ளத்தனமாக துப்பாக்கி விற்பனை செய்கிறார். என்றும் அவருக்கு முட்டக்குடியைச் சேர்ந்த அரவிந்தன், சக்திவேல் உள்ளிட்டவர்கள் உடந்தை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, திருப்பனந்தாள் போலீஸார் டாக்டர் ராம்குமார் மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், உடனடியாக டாக்டர் ராம்குமார் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, 5 ஏர்கன் வகைகள், ஒரு ரிவால்வர், 2 பெல்ட் ரிவால்வர் என 8 துப்பாக்கிகள் மற்றும் அதனுடன் 67 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். டாக்டர் வீட்டில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராம்குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். .