சென்னை (16 பிப் 2020): நான் என்ன உடை அணிய வேண்டும் என்பது குறித்து உங்களுக்கு என்ன கவலை? நாட்டில் பல விசயங்கள் நடக்கின்றன, அதில் கவனம் செலுத்துங்கள் என்று ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சர்ச்சையான எழுத்துகள் மூலம் பெயர் பெற்றவர் வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ்லிமா நஸ்ரின். இவர் தற்போது இந்தியாவில் வசித்து வருகிறார்.
இவர் அவரது சமூக வலைதள பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா பர்தா அணிவது குறித்து விமர்சித்து பதிவிட்டிருந்தார். அதில் “எனக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது மகளைப் பார்க்குப் போது எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது போல் உள்ளது. பாரம்பரியமிக்க குடும்பத்தில் உள்ள படித்த பெண்கள் கூட எளிதாக மூளைச்சலவை செய்யப்படுவது வேதனையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கதீஜா சமூக வலைதள பக்கத்தில் அளித்துள்ள பதிலில், “ஒரு வருடமாக இந்த விவகாரம் சுற்றி வருகிறது. நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மக்கள் ஒரு பெண் என்ன ஆடையை அணிய வேண்டும் என்பதில் கவனத்தைச் செலுத்துகின்றனர்.
ஒவ்வொரு முறையும் இந்த விவகாரம் விஸ்வரூபமெடுக்கும் போது என்னுள் எரியும் தீ பல்வேறு விஷயங்களைச் சொல்வதற்கு என்னைத் தூண்டுகிறது. பல ஆண்டுகளாக நான் என்னுள் கண்டிராத பல்வேறு குணாதிசயங்களைக் கடந்த ஒரு வருடமாக கண்டுவிட்டேன். என்னுடைய வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகளை எண்ணி பலவீனமடையவோ வருத்தப்படவோ மாட்டேன்.
நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொள்பவர்களுக்கு நன்றி. என்னுடைய பணிகள் மட்டுமே பேசும். மேற்படி நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. இதற்கு நான் ஏன் விளக்கமளிக்கிறேன் என்று நினைத்தால், தனக்காக ஒருவர் பேசியாக வேண்டியிருக்கிறது. அதனால் தான் இதைச் செய்கிறேன்.
அன்புள்ள தஸ்லிமா நஸ்ரின், என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். எனது உடையால் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதில்லை. அதற்குப் பதிலாக எனக்குப் பெருமையாகவும் நான் ஏற்றுக் கொண்ட விஷயத்தில் உறுதியாகவும் உணர்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B8jzyv4lKTT/?utm_source=ig_web_copy_link
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ திரைப்படத்தின் 10-ம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா கலந்து கொண்டு தனது தந்தையுடன் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினார். அப்போதும் மேடையில் கதிஜா கண்கள் மட்டும் தெரியும் வகையில் பர்தா அணிந்திருந்தார். இந்த உடை மிகுந்த விவாதப் பொருளாக மாறியது.
சமூக வலைதளங்களில், ‘ரஹ்மானயும், கதீஜாவையும் ஆதரித்தும் எதிர்த்தும் பதிவிட்டு இருந்தனர். அதற்கு அப்போது பதிலளித்த கதிஜா ரஹ்மான், தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘நான் எந்த உடையை அணிய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். எனது தேர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் என் பெற்றோர்கள் பொறுப்பல்ல. விவரம் புரியாமல் தேவையில்லாத முடிவுகளுக்கு வரவேண்டாம்’ எனக் குறிப்பிட்டு பலரது வாயை அடைத்தார்..