சென்னை (25 மார்ச் 2019): நடிகை நயன் தாரா குறித்து சர்ச்சையாக பேசிய நடிகர் ராதாரவி திமுகவிலிருந்து தாற்காலிகமாக நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவான “கொலையுதிர் காலம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் டிரைலர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுதொடர்பான நிகழ்ச்சியில் நடிகரும், டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவர் ராதாரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நயன்தாரா ஒரு சிறந்த நடிகை. ஆனால் அவர் குறித்து வராத செய்திகளே கிடையாது. பேயாகவும் நடிக்கிறார். சீதாவாகவும் நடிக்கிறார்.
முன்பெல்லாம் சாமி வேடம் போட கே.ஆர்.விஜயாவை கூப்பிடுவார்கள். ஆனால் தற்போது யார் வேண்டுமானாலும் நடிக்கிறார்கள். அவர்கள் கும்பிடும் படியாகவும் இருக்கிறார்கள். கூப்பிடும் படியாகவும் இருக்கிறார்கள்.
நிலைமை அப்படி போய்விட்டது என்று அருவெருக்கத்தக்க வகையில் பேசியது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் ராதாரவிக்கு விக்னேஷ் சிவன், ராதிகா, சின்மயி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து, திமுகவில் இருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாலும், திமுகவில் இருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்தார்.
Actor Radha ravi suspended from dmk