சென்னை (24 ஜன 2020): சென்னையில் டெல்லி ஷஹீன் பாக்கைப் போன்று பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்
டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் உத்திர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் வெள்ளிக்கிழமை 2500 க்கும் அதிகமானோர் போராட்டத்திற்கு வந்தனர். அதில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பெண்கள், இரவிலும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் போராட்டக் காரர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை அடுத்து கலைந்து சென்ற போராட்டக் காரர்கள் மீண்டும் நாளை தொடர்வோம் என அறிவித்துள்ளனர்.