சென்னை (27 பிப் 2020): டெல்லி வன்முறைக்கு மத்திய உளவுத்துறையே என்று கூறிய நடிகர் ரஜினியின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக நேற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம் மத்திய அரசினுடைய உளவுத்துறையின் தோல்வி. மத்திய அரசைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். டிரம்ப் இந்தியாவுக்கு வந்திருக்கும்போது மத்திய அரசு ஜாக்கிரதையாக இருந்திருக்கவேண்டும். உளவுத்துறை அவர்களது வேலையை சரியாகச் செய்யவில்லை. வன்முறையில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும்.
உளவுத்துறை தோல்வியென்றால் உள்துறை அமைச்சகத்தின் தோல்வியென்றுதான் அர்த்தம். மதத்தை வைத்து அரசியல் செய்வதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மதத்தை வைத்து அரசியல் செய்வதை ஒடுக்க வேண்டும். ஊடகங்கள் ஒற்றுமையாக இருந்து எது நியாயம் என்பதைக் காட்டவேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. அதனை நான் சொன்னால், நான் பா.ஜ.கவோடு இணைத்து பேசுகிறார்கள். பா.ஜ.கவின் ஊதுகுழல் என்று என்னைக் கூறுவது எனக்கு வேதனை தருகிறது. வன்முறைச் சம்பவங்களை மத்திய, மாநில அரசுகள் தொடக்கத்திலேயே இதனை களைய வேண்டும்’” என்று பேசியிருந்தார்.
ரஜினியின் கருத்தை விமர்சித்துள்ள பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் , இது ரஜினியின் அறியாமை, ரஜினி மற்றவர்களைப் பார்த்து மலிவான அரசியலை செய்யாமல் இருப்பது அவரது எதிர்காலத்திற்கு நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் இந்த கருத்துக்கு கமல்ஹாசன், திருமாவளவன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.