சென்னை (09 மார்ச் 2023): இஸ்லாமியர்களைப் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் 163 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமனை சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் கடந்த அக்டோபர் மாதம் நள்ளிரவில் கைது செய்தனர்.
பெண் பத்திரிகையாளர்கள், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் இஸ்லாமிய மற்றும் கிருத்துவ மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் அருவறுக்கத்தக்க கருத்துக்களை கல்யாணராமன் தொடர்ந்து பரப்பி வருவதாக, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி நிர்வாகியுமான எம்.கோபிநாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். இதனால் கல்யாணராமன் தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
மேலும் அவரை அக்டோபர் 23ஆம் தேதி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
தொடர்ந்து குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சாந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் நக்கீரன் அடங்கிய அமர்வானது, கல்யாணராமனின் மீதான குண்டாஸை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது.
அதன் பின்னர், கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், அவதூறாகப் பேசமாட்டேன் என நீதிமன்றத்தில் அளித்த நிபந்தனை வாக்குறுதியை மீறி தொடர்ந்து அவதூறு கருத்துக்களை கல்யாணராமன் வெளிப்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் கல்யாண ராமன் தொடர்ந்து சமூகவலைதளத்தில் சர்ச்சைக்குரிய அவதூறு கருத்துக்குகளை பதிவிட்டு வந்தார். காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் கல்யாணராமன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் 163 நாட்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. ஆனால், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் முதல் அவர் சிறையில் இருந்து வந்ததால், தண்டனைக் காலம் முடிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.