சென்னை புத்தக கண்காட்சி – பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்!

சென்னை புத்தக கண்காட்சி - பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்!
Share this News:

சென்னை (09 ஜன 2020): சென்னை புத்தக கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

”புரட்சி பாதையில் கைத்துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே” என்று லெனின் கூறியிருக்கிறார். “உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அதுபோல மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு” என்று சிக்மண்ட் ஃப்ராய்ட் சொல்லியிருக்கிறார்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த புத்தகங்களை அதுவும் லட்சக்கணக்கில் ஒரே இடத்தில் பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதுவும் வெறும் காட்சிக்கு மட்டுமல்ல விலைக்கு வாங்கிச் சென்று படித்து அறிவை பெருக்கி கொள்ளலாம் என்றால் யார் தான் சும்மா இருப்பார்கள்.

சென்னையில் நீண்ட வரலாற்றை பதிவு செய்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியின் மற்றொரு நிகழ்வு இன்று அரங்கேற காத்துக் கொண்டிருக்கிறது. இது 43வது புத்தகக் கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கம், பதிப்பாளர் சங்கத்தினர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு புத்தக கண்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

மொத்தம் 800 அரங்குகளில் ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. இம்முறை 20 லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் வருகை புரிவர் என்று பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணம் இலவசம்.

வார நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தக கண்காட்சி நடைபெறும்.

புத்தக கண்காட்சியில் திருவள்ளுவரின் மணல் சிற்பத்தை ஒடிசா சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைக்க உள்ளார். மேலும் கீழடி – ஈரடி என்ற தலைப்பில் அரங்கம் ஒன்று தொல்லியல் துறை ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.

வரும் 21ஆம் தேதி வரை சென்னை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.


Share this News:

Leave a Reply