ராணிப்பேட்டை (20 மே 2020): ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் இன்று காலை டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றுக் கொண்டு வந்தது.
மதுப் பிரியர்கள் காலையிலே வரிசையில் நின்று டோக்கன் பெற்றுக்கொண்டு தேவையான சரக்குகளை வாங்கி கைகளிலும் இடுப்பிலும் பாக்கெட்களில் கோணிப்பை போன்றவற்றில் வாங்கி மறைத்து எடுத்துச் சென்றனர்
தக்கோலம் டாஸ்மாக் கடையில் போதுமான மதுபானங்கள் இருந்தமையால் மது பிரியர்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிச் சென்றனர்
இந்நிலையில் அப்பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சிலர் அங்கும் இங்கும் பதட்டத்துடன் காணப்பட்டனர். ஏதோ தமிழக அரசுதான் இவர்களை பாதுகாப்பிற்காக வைத்திருப்பார்கள் என்று அவர்களை கவனித்தபோது பின்புதான் தெரிந்தது அவர்களும் எப்படியாவது இன்று விற்பனை செய்யும் தமிழக அரசின் டாஸ்மாக் கடையில் இருந்து மதுவை பெற்றுச் செல்ல வேண்டும் என்று ஆர்வத்துடன் வந்திருப்பது.
இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை முற்றுகையிட அவரோ டோக்கன் இருந்தால்தான் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்க முடியும் என்று கூறினர். அவர்கள் தங்களுக்கு மதுபானத்தை எப்படியாவது பெற்றுத்தர அவரை நிர்ப்பந்திக்க காவலரும் டோக்கன் பெற வழி செய்தார். டோக்கன் பெற்றுக்கொண்ட நபர் மதுபானம் வாங்க கடைக்கு செல்ல, இருவர் தாங்கள் வந்த ஜீப்பில் தயாராக இருந்தனர்.
டாஸ்மாக் கடைக்குச் சென்ற நபர் வரிசையாக ஒழுங்காக நின்றுகொண்டிருந்த மது பிரியர்களை கண்டுகொள்ளாமல் நேராக குறுக்கு வழியில் கடைக்குச் சென்று டோக்கனை கொடுத்து தங்களுக்குத் தேவையான மதுபானத்தைப் பெற்றுக்கொண்டார். பெற்றுக்கொண்ட நபர் தான் சாதனை புரிந்தது போல் இரண்டு கைகளில் மது பானத்தை ஏந்திக்கொண்டு ரோட்டில் நடந்து சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில் மதுபானத்தை வாங்கிச் சென்ற நபர் நடந்து சென்று கொண்டிருக்க மறுபக்கம் ஜீப்பில் தயாராக இருந்த இருவர் ஜீப்பை படு வேகமாக ஓட்டிச்சென்று டாஸ்மாக் கடையில் சரக்குடன் வந்த நபரை ஏற்றிக்கொண்டு மின்னலாக பறந்தனர். அவர்கள் பயிற்சி பெறும் மையம் அருகில் இவர்களைக் குறித்து விசாரித்தபோது தக்கோலத்தை அடுத்த நகரி குப்பத்தில் இயங்கி வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி பிரிவின் வீரர்களாக இவர்கள் இருக்கலாம் என்றனர்.